தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு ஒரு தொகுதி கூட குறையாது என அமித்ஷா பேசியிருந்தார். எனினும், தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் குறைக்காமல் வடமாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரித்தால், அதுவும் அநீதியே என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
இதனிடையே, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநில முதல் மந்திரிகள் மற்றும் கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். அதேபோல பல்வேறு மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று, பங்கேற்க தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி. ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வரவேற்றனர்.