நதிநீர் பிரச்னையில் அண்டை மாநிலங்கள் உடன்பேசினால் காரியம் கெட்டுவிடும்: துரைமுருகன்!

நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் பேசியவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் அண்டை மாநில முதலமைச்சர்களுடன் விரோதமாக இருந்ததில்லை என்பதை சுட்டிக்காட்டிய துரைமுருகன், “பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை. அதனால்தான் சட்டப்போராட்டத்தை தேர்ந்தெடுத்தோம். உச்சநீதிமன்றமே நமது உரிமைகளுக்கு தீர்வு அளித்துள்ளது” என்றார். மேலும், “இருவரும் பேச ஆரம்பித்தால், நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் கைவிடும். அப்போது எல்லா விவகாரங்களும் கெட்டுப்போகும்” என்று எச்சரித்தார்.

மார்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும், பேச்சுவார்த்தைக்கு முடியாது என்று மறுத்ததையும் அவர் நினைவூட்டினார். “வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது பேசி பாருங்கள் என்று கூறினார். ஆனால், பேசுவதால் பயனில்லை என்பதால் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார். அண்டை மாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்வதால், பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

காவிரி மேலாண்மை வாரியம் 30 முறை கூடியதாகவும், மேகதாது அணை தொடர்பாக பேச உரிமை இல்லை என்று தமிழகம் திட்டவட்டமாக மறுத்ததாகவும் துரைமுருகன் தெரிவித்தார். “மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு அளித்த அவர்கள் (கர்நாடக அரசு), காவிரி மேலாணை வாரியத்தில் விவாதிக்க வேண்டும் என்றனர். நம்மை மடக்க சொலிசிட்டர் ஜெனரலிடம் முறையிட்டனர். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று, அறிக்கையை திருப்பி அனுப்ப வைத்தோம்” என்று விளக்கினார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகமும் கேரளாவும் வழக்கு தொடர்ந்ததாகவும், 14 முறை 142 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். “அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நீங்கள் தொடங்கினீர்கள் என்கிறீர்கள். ஆனால், அதை கிடப்பில் போட எங்கள் தலைவர் விரும்பவில்லை. நிதி ஒதுக்கி அதை முடித்தோம். ஆனால், தாமிரபரணி-கருமேனி ஆற்றுத் திட்டத்தை நீங்கள் 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டீர்கள். நாங்கள் வந்து அதை முடித்தோம்” என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.

“நாங்கள் மாற்றான் தாய் மனதுடன் செயல்படவில்லை. நீங்கள் தான் அப்படி செய்தீர்கள்” என்று குற்றம்சாட்டிய துரைமுருகன், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் 22 வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழக உரிமைகளை பாதுகாக்க போராடி வருவதாகவும் தெரிவித்தார்.