என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் காரணம் என யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் கூறியதாவது:-
இன்று காலை 9.30 மணிக்கு அலுவலகத்திற்கு செல்லும் போது என் வாகனத்தின் மீது கல் எறிந்தார்கள். என் அம்மாவிடம் போனில் பேசிக் கொண்டு இருக்கும்போதே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் அளித்தேன். என் அம்மாவின் போனை பிடுங்கி என்னிடம் வீடியோ கால் பேசினர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் அவர்கள் துப்புரவு தொழிலாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி உடன் 230 கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தை வழங்கினார். இதில் 87 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள், மீதமுள்ள அத்தனை பேரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் பினாமிகள். வாகனங்களை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தரும் பணத்தை தனியார் கம்பெனியில் முதலீடு செய்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் கொடுத்துவிட்டு மீத பணத்தை செல்வப்பெருந்தகை எடுத்துக் கொள்கிறார் என நான் குற்றம்சாட்டி இருந்தேன். இது தொடர்பான ஆதாரங்களை நான் காணொலியில் காண்பித்து இருந்தேன்.
செல்வப்பெருந்தகை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களும் சேர்ந்து தூண்டிவிட்டுதான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். அருண் அவர்கள் செய்யும் முறைகேடுகளை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த வீட்டின் முகவரி யாருக்குமே தெரியாது. மதுரவாயிலில் உள்ள எனது சொந்த வீடு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டுக்கு வந்து 3 மாதம்தான் ஆகிறது. இந்த வீட்டின் முகவரியை காவல்துறை உள்ளிட்ட யாருக்கும் கொடுத்ததே கிடையாது. காவல்துறை என் வீட்டின் முகவரியை அளித்து தூண்டிவிட்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். செல்வப்பெருந்தகை மற்றும் அருண் நெருக்கம் என்பது எனக்கு தெரியும். திரு.அருண் அவர்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையின் தொடர்பு தெரியக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக புலனாய்வை முடித்து குற்றப்பத்திக்கையை தாக்கல் செய்து உள்ளார்.
ஒட்டுமொத்தமாக என்னையும், எனது சவுக்கு மீடியாவையும் முடித்துவிட வேண்டும் என அருண் திட்டமிட்டு செயல்படுகிறார். வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புகார் நிச்சயம் கொடுப்போம். சவுக்கு மீடியாவை நிறுத்த சொல்லி நீண்டநாட்களாக மிரட்டல் வந்து கொண்டு இருந்தது. அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் நான் இறுதி எச்சரிக்கையாக பார்க்கிறேன். வீடு புகுந்து சாப்பிடும் டேபிள் மற்றும் படுக்கை அறைகளில் மலம் அள்ளி ஊற்றுகிறார்கள் என்றால் நீ உனது மீடியாவை நிறுத்து என்பதன் எச்சரிக்கைதான். என் வீடு மற்றும் அலுவலகத்தை காலி செய்ய சொல்லிவிட்டார்கள். எந்த அளவுக்கு கீழ் தரமாக இந்த அரசு இறங்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதை நான் 4 ஆண்டுகளாக பேசி வருகிறேன். இப்படி தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு நான் செய்த தவறு என்ன?. துப்புரவு தொழிலாளிகள் வயிற்றில் அடித்து சுரண்டாதே என்றுதான் நான் பேசி உள்ளேன். அவர்களை நான் இழிவாக பேசவில்லை. காவல்துறை விசாரணையில் கிடைத்த புகைப்படங்களை கொண்டு போஸ்டராக அடித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.