டெல்லி பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகம்.

டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு இன்று செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து, சிஎம் ஸ்ரீ பள்ளிகள், மொழி ஆய்வகங்கள், நவீன கணினி ஆய்வகங்கள் மற்றும் தொழில் தொடங்குதல் ஆதரவு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தது.

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகம். கடந்த மாத சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி, 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக அரசு அமைத்த பின்னர் வெளியிடப்பட்ட முதல் பட்ஜெட் இது.

டெல்லி பட்ஜெட் 2025-26 முக்கிய அம்சங்கள்:

* புதிய சிஎம் ஸ்ரீ பள்ளிகளை அமைக்க ரூ. 100 கோடி மற்றும் நரேலாவில் கல்வி மையத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* டெல்லி அரசின் பட்ஜெட்டில், பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனாவுக்கு ரூ. 2,144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* டெல்லியின் 2026 நிதியாண்டு பட்ஜெட்டில் யமுனை சுத்திகரிப்புக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு; 40 எஸ்டிபிகளை மத்தியப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே ஆற்றில் செலுத்தப்படும்.

* தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்க ரூ. 5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க ரூ. 7.5 கோடி ஒதுக்கீடு.

* பெண்களின் பாதுகாப்புக்காக 50,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

* நீர் வழங்கல் மற்றும் சுகாதார அமைப்பை மேம்படுத்த ரூ. 9,000 கோடி ஒதுக்கீடு.

* எஸ்டிபிகளை சீரமைக்கவும், மேம்படுத்தவும் ரூ. 500 கோடி, பழைய கழிவுநீர் குழாய்களை மாற்ற ரூ. 250 கோடி ஒதுக்கீடு.

* ஊழலைத் தடுக்க, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான பயண அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* பன்மொழித் திறனை வளர்ப்பதற்காக, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் 100 புதிய மொழி ஆய்வகங்கள் நிறுவப்படும். பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் பிற மொழிகளில் படிப்புகள் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாணவர்களிடம் தொழில் மனப்பான்மையை வளர்ப்பதற்காக ‘புதிய தொழில்முனைவோர் சூழல் மற்றும் பார்வை’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கு ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ரூ. 50 கோடி செலவில் 175 புதிய கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.

* திகார் சிறையை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, ஆய்வுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.