எம்பிக்களின் சம்பளத்தை 24% உயர்த்திய மத்திய அரசு!

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளத்தை உயர்த்தியுள்ளது. எம்பிக்களின் சம்பளம் மற்றும் முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக எம்பிக்கள் மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கிடையே மத்திய அரசு அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. மேலும், முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. எம்பிக்களின் சம்பளம், தினசரி அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியங்களை சுமார் 24 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இப்போது எம்பிக்களாக இருப்போர் அவை நடக்கும்போது பங்கேற்றால் அதற்கும் தனியாக அலவன்ஸ் வழங்கப்படும். அதையும் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருந்தால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும் நிலையில், அதுவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை எம்பிக்கள் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கி வந்தனர். எம்பிக்களின் சம்பளம் 24% உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எம்.பி.க்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாக அதிகரிக்கும். மேலும், தினசரி அலவன்ஸும் ரூ.2,000 லிருந்து ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் மாதம் ரூ.25,000லிருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியமும் மாதம் ரூ.2,000லிருந்து ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ்கள் மற்றும் ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் சம்பளம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.