கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி

ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய கூட்டணியின் துணை மாணவர் அமைப்புகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும் கல்வி முறையையும் அழிக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.). கல்வி முறை அவர்களின் கைகளுக்குச் சென்றால்.. இந்த நாடு அழிக்கப்படும். யாருக்கும் வேலை கிடைக்காது, நாட்டை முடித்து விடுவார்கள்.

இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆதிக்கத்தில் உள்ளனர் என்பதை மாணவர் அமைப்புகள் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்” என்று ராகுல்காந்தி கூறினார்.

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா குறித்துக் கருத்து தெரிவித்ததை நினைவு கூர்ந்த ராகுல்காந்தி, வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்து பிரதமர் பேசியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், “வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவர்களின் மாதிரி அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்து, நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ்-இடம் ஒப்படைப்பதாகும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நீங்கள் இந்திய கூட்டத்தின் மாணவர்கள், நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. இந்தப் போராட்டத்தை நாம் ஒன்றாகப் போராடி ஆர்.எஸ்.எஸ்-ஐ பின்னுக்குத் தள்ளுவோம்” என்று தெரிவித்தார்.