என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் காரணம் என யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசப்பட்ட சம்பவத்திற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளதாவது:-
சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசப்பட்ட சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வளவு காலமாக மலத்தை அள்ளிவிட்டு அந்த கையை சுத்தம் செய்துவிட்டு சாப்பிடும் அவல நிலை இருந்தது. அந்த அவல நிலையை ஒரு திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மாற்றி இருக்கிறார். இதில் தவறு ஏதேனும் இருந்தால் தகுந்த அதிகாரிகளிடம் முறையிடலாம் அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு உண்மையை வெளிக்கொண்டு வரலாம். ஆனால், அந்த மக்களை பற்றி கொச்சைப்படுத்துவது, தகுதியற்றவர்கள் என்று தவறாக பேசக்கூடாது.
இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன். கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கட்டும். சவுக்கு சங்கருக்கு வேண்டிய ஒருவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கொண்டுவர முயற்சி செய்துவருகிறார். ஏன் இவ்வளவு காலம் சவுக்கு சங்கர் அமைதியாக இருந்தார். என்னை திட்டினால் அவருக்கு பணம் கிடைக்கும் என்றால் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, செல்வப்பெருந்தகை மீது சவுக்கு சங்கர் ஊழல் குற்றச்சாட்டு சுமந்தி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் அவர்கள் துப்புரவு தொழிலாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 230 கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தை வழங்கினார். இதில் 87 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள், மீதமுள்ள அத்தனை பேரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் பினாமிகள். வாகனங்களை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தரும் பணத்தை தனியார் கம்பெனியில் முதலீடு செய்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் கொடுத்துவிட்டு மீத பணத்தை செல்வப்பெருந்தகை எடுத்துக் கொள்கிறார் என நான் குற்றம்சாட்டி இருந்தேன். இது தொடர்பான ஆதாரங்களை நான் காணொலியில் காண்பித்து இருந்தேன்.
செல்வப்பெருந்தகை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களும் சேர்ந்து தூண்டிவிட்டுதான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். அருண் அவர்கள் செய்யும் முறைகேடுகளை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். இந்த வீட்டின் முகவரி யாருக்குமே தெரியாது. மதுரவாயிலில் உள்ள எனது சொந்த வீடு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டுக்கு வந்து 3 மாதம்தான் ஆகிறது. இந்த வீட்டின் முகவரியை காவல்துறை உள்ளிட்ட யாருக்கும் கொடுத்ததே கிடையாது. காவல்துறை என் வீட்டின் முகவரியை அளித்து தூண்டிவிட்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். செல்வப்பெருந்தகை மற்றும் அருண் நெருக்கம் என்பது எனக்கு தெரியும். திரு.அருண் அவர்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையின் தொடர்பு தெரியக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக புலனாய்வை முடித்து குற்றப்பத்திக்கையை தாக்கல் செய்து உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.