ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை தடை நீட்டித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில், பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதால், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது. அதன்படி கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பதில் அளிக்க கால அவகாசம் வேண்டுமாறு அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட் மதுரை கிளை, ஏப்.23 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து, அதுவரை போராட்டம் நடத்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.