டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கிய நபர்கள் 2 பேர் சிறை செல்ல வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் அவதூறு வழக்கில் எச்.ராஜா நேற்று ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கிய நபர்கள் 2 பேர் சிறை செல்ல வாய்ப்பு உள்ளது. வடமாநிலத்தினரைப் பற்றி தமிழக அமைச்சர்கள் அவதூறாகப் பேசியவற்றை இந்தியில் மொழிபெயர்த்து ஒளிபரப்பப்படும். தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பில்லை என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய பிறகும் தமிழக முதல்வர் எதற்கு கூட்டம் நடத்த வேண்டும்?
கோயில்களில் பக்தர்கள் உயிரிழக்கக் கூடிய நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், கோயில்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், கோயில் நிதியை எடுத்து ரிசார்ட் கட்ட முயன்ற தமிழக அரசின் செயல், நீதிமன்றம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்த தமிழக அரசு, கோயிலில் உயிரிழந்தவருக்கு கொடுக்கவில்லை. பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு பெருகி இருப்பதை திருச்சியில் நடைபெற்ற மாநாடு வெளிப்படுத்தி உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதேசமயம், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.