செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு நீதிமன்றம் சம்மன்!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் இப்போது சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நேரில் ஆஜராகும்படி அசோக்குமாருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு மின்சார துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ளவர் செந்தில் பாலாஜி. தற்போது திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் செந்தில் பாலாஜி, இதற்கு முன்பு அதிமுகவில் இருந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெற்றுத் தருவதாகச் சொல்லி பலரிடம் பண மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2023ல் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார். சுமார் ஓராண்டு வரை சிறையில் இருந்த அவர் அதன் பிறகே வெளியே வந்தார்.

இதற்கிடையே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத் துறை வழக்கில் ஏப்ரல் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.