தகவல் தொழில்நுட்பத் துறையின் நிதிநிலை தட்டுப்பாட்டில் உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்எல்ஏ முனுசாமி பேசுகையில், ‘‘தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு மின்னாளுமை நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் திறன்மிகு மையத்தை சென்னையில் மட்டுமின்றி ஓசூர், சூலூரிலும் அமைக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசும்போது, ‘நான் நிதி அமைச்சராக இருந்தபோது இந்த துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.130 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் இன்று தமிழக அரசின் நிதி நிலைமை தட்டுப்பாட்டில் உள்ளது. ஐடி துறையும் நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ.300 கோடிக்கு மேற்பட்ட நிதியை ஐடி துறையிடம் இருந்து தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. மானிய நிதியும் துறைக்கு வந்து சேரவில்லை. இத்தகைய தடைகளுடனே துறை நிதியை செலவிட முடிகிறது. நிதிநிலை சீராகும்போது உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்’’ என்றார்.
தொடர்ந்து எம்எல்ஏ முனுசாமி, ‘‘செயற்கை நுண்ணறிவு மையம் ஓசூரில் அமைக்க வேண்டும்” என்று கோரினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். சிறந்து விளங்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை தொடர்பு கொண்டு சென்னையில் கிளைகள் தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம். செயற்கை நுண்ணறிவில் முக்கியமானது தகவல் பதிவேற்றம். சுமார் 8 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் 1921-ம் ஆண்டு முதல் உள்ள தகவல்களை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன’’ என்று தெரிவித்தார்.