மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்திய, இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வவுனியாவில் நடந்த இரு நாட்டு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இலங்கையில் உள்ள வவுனியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக மீனவப் பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் (ராமேசுவரம்), சுரேஷ் (நாகை மாவட்டம்) ஆகியோரும், இலங்கை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி சேசுராஜா, இலங்கை மீனவப் பிரதிநிதிகள் அன்னராசா (யாழ்ப்பாணம்), ஆலம் (மன்னார்) ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2016-ல் டெல்லியில் கடைசியாக நடந்த இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட முடிவுகள் எதையுமே கடந்த 9 ஆண்டுகளில் இரு நாட்டு அரசாங்கமும் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், இரு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் பிரச்சினைகளை இரு நாட்டு அரசுகளும் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, உடனடியாக இரு நாட்டு அரசுகளும் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதல்கட்டமாக இரு நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்து, அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பது ராமேசுவரம் மீனவர்களின் நோக்கமல்ல. இழு வலை மூலம் மீன்பிடிப்பதை படிப்படியாக நிறுத்தவும் சம்மதிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
முன்னதாக, நடுக்கடலில் இறந்த இரு நாட்டு மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.