கேரள கல்லூரிகள் வன்முறை மற்றும் போதைப் பொருள் மையங்களாக திகழ்வதாக மாநில பாஜகவின் புதிய தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டினார்.
கேரளாவில் சைதன்யகுமாரி (20) என்ற நர்சிங் மாணவி கடந்த டிசம்பரில் தனது விடுதியில் தற்கொலைக்கு முயன்றார். இதனால் மூன்று மாதங்களுக்கும் மேலாக கோமா நிலையில் இருந்த அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்டதால் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான கேள்விக்கு கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று கூறியதாவது:-
உலகின் ஒவ்வொரு நாடும் தங்கள் இளைஞர்களை ஒரு சொத்தாகப் பார்க்கும் காலகட்டத்தில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. உலகின் பொருளாதார கட்டமைப்பு திறமையான இளைஞர்களை மையமாக கொண்டு கட்டமைக்கப்படும் ஒரு காலகட்டத்தில், கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் வன்முறை மற்றும் போதைப்பொருட்களின் மையங்களாக மாறியுள்ளன.
கேரள கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளில் 30% முதல் 40% வரையிலான இடங்கள் காலியாக உள்ளன. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதால் பிற மாநிலங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். 100 சதவீத கல்வியறிவு பெற்றிருந்த ஒரு மாநிலத்தில் இன்று அசட்டு அரசியல் நிலவுகிறது. இதனால் இளைஞர்கள் வெளியேறவோ அல்லது போதைப் பொருள், வன்முறை போன்ற பிரச்சினைகளில் சிக்கவோ நேரிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர், கேரள பாஜக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.