மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மதுரையி்ல் நடைபெறவிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஏப்ரல் 1–ம் தேதி தமுக்கம் மைதானத்தில் தொடங்கும் மாநாட்டில், கட்சி வரலாற்று கண்காட்சி, புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. ஏப். 2-ம் தேதி கருத்தரங்கம் நடக்கிறது. ஏப்.3-ம் தேதி மாலை `கூட்டாட்சி கோட்பாடு இந்தியாவின் வலிமை’ என்ற சிறப்புக் கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா ஆகியோர் பேசுகின்றனர். ஏப். 4-ம் தேதி மாலை நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, இயக்குநர் வெற்றிமாறன், ஏப். 5-ம் தேதி மாலை நடிகை ரோகிணி, நடிகர் பிரகாஷ்ராஜ், திரைப்பட இயக்குநர்கள் மாரி செல்வராஜ், த.செ.ஞானவேல் ஆகியோர் பேசுகின்றனர்.
ஏப்.6-ம் தேதி வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முக்கியத் தலைவர்கள் பேசுகின்றனர். முன்னதாக, பிற்பகல் 3 மணியளவில் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி நடைபெற்ற மாநாட்டு அழைப்பிதழ் வெளியீட்டு விழாவில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.