டெல்லியில் 3 கார்களில் மாறி சென்ற எடப்பாடி பழனிசாமி: உதயநிதி ஸ்டாலின்!

ரூட் மாற மாட்டேன் என சொல்லிவிட்டு டெல்லியில் 3 கார் மாறி மாறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது சிறப்பு திட்டங்கள் மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை கார் பந்தயத்தை விமர்சித்தவர்களே பாராட்டும்படி நடத்திக் காட்டியிருக்கிறோம். எந்த சவாலான போட்டியையும் எளிதில் நடத்தும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதற்குச் சான்று இது. ராதாபுரத்தில் சர்வதேச மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். அவைத் தலைவர் அப்பாவு கோரிக்கையை ஏற்று முதல்வர் ஏற்கெனவே அறிவித்த திட்டம் இது.

கடந்த ஆண்டு எனது காரில் ஏற முயன்றார் எடப்பாடி பழனிசாமி, அப்போது எனது பாதை மாறாது என அவர் கூறினார். ஆனால் தற்போது 3 கார்கள் மாறி மாறி டெல்லிக்கு பயணித்தார். ஒருமுறை கூட பேரவையில் என் பதிலின்போது இபிஎஸ் இல்லை. அவசரமாக டெல்லி சென்றுவிட்டார். ரூல்ஸ் பாசிஸ்டுகள் பல ரூல்ஸ் போட்டாலும் அடக்க நினைத்தாலும் தமிழக பட்ஜெட்டில் “ரூ” போட்டு அலறச் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். இதுவரை 13 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 37 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை மகளிர் உரிமை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும்.

சென்னையில் நடந்த கார் பந்தயம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. கார் பந்தயத்தை விமர்சித்தோரே பாராட்டினர். நம் முதல்வர் இருக்கும் வரை இந்தி திணிப்பு அல்ல, எந்த திணிப்பும் இருக்காது. நிலமுள்ள தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டம் முடிவடைந்து, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் அவர்களின் கார்கள் தயாராக இருந்தன. வழக்கமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கார், 4ஆவது கேட் அருகே நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் கூட்டம் முடிந்ததும், 4ஆவது கேட் வழியாக வெளியே வந்தார். ஆங்கில ஊடகங்கள் அப்போது அங்கு கூடியிருந்த ஆங்கில தொலைக்காட்சி நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டபடி நடந்து வந்தனர். ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எடப்பாடி அமைதியாக சென்று கொண்டிருந்தார். பின்னர் அங்கு நின்ற சாம்பல் நிறத்தினாலான காரில் ஏற, கதவை திறக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் ஒருவர், சார் இது உங்கள் கார் இல்லை என சொன்னதும் எடப்பாடி சுதாரித்துக் கொண்டார். ஓ இது என் வண்டி இல்லையா என கேட்டுவிட்டு சாரி என சொல்லிவிட்டு, தனது உதவியாளரை கடிந்து கொண்டார். பின்னர் அதற்கு முன்னால் நின்றிருந்த அதே நிற காரில் ஏறி எடப்பாடி சென்றார். அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்ற கார், உதயநிதி ஸ்டாலினின் கார் என தெரியவந்தது. இந்த நிலையில் இதுகுறித்து சட்டசபையில் பேசிய உதயநிதி, எடப்பாடி பழனிசாமி எனது காரில் தவறுதலாக ஏற சென்றார். அவர் எனது காரை தாராளமாக எடுத்துச் செல்லட்டும், ஆனால் ரூட் மாறி கமலாலயத்திற்கு செல்லாமல் இருந்தால் சரி என்றார். அதற்கு ஓபிஎஸ், நாங்கள் ரூட் மாறி செல்ல மாட்டோம் என்றார். அதைத்தான் உதயநிதி இன்று சுட்டிக்காட்டி, அன்று ரூட் மாறாதுனு சொன்னீங்களே இன்று 3 கார்களில் மாறி மாறி அமித்ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றாரே என விமர்சித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக கூறியிருந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.