வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், 600-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையை முடிக்க ஆயிரத்து 500 ஆண்டுகளாகும் என்பதால் வழக்குகளை தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் ஒரே மாதிரியானவை. வழக்குகளை சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு தான் என தெரிவிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டபட்டவரில் ஒருவர் தரப்பில், மனுதாரர், மூன்றாம் நபர். வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியல்ல. வழக்குகளை தனித்தனியாக விசாரித்தால் தான் தாமதமாகும் என்பதால், சேர்த்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி தான் என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.