தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உழைப்புக்கான ஊதியத்துக்காக பணியாளர்கள் காத்திருக்கின்றனர் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பணம் ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து இன்று கோவில்பட்டியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. தலைமை வகித்து பேசியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தின் வழியாக அவர்களுக்கு வரவேண்டிய ஊதியம் சம்பளம் சரியாக வருவதில்லை. அந்த பணத்தை எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். கடந்த மாதம் கூட தமிழ்நாட்டின் நிதி அமைச்சரும், நானும் மத்திய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து இதற்காக கோரிக்கை வைத்தோம். அதேபோல், மத்திய விவசாய துறை அமைச்சரையும், சந்தித்து எங்களுக்கு பல மாதங்களாக ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான தொகை வரவில்லை. அதனால் அந்தத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களையும் சம்பளம் தர முடியவில்லை.
பெண்களும் ஆண்களும் உழைத்து விட்டு, அந்த உழைப்புக்கான ஊதியம் வராமல் காத்துக் கிடக்கின்றனர் என தெரிவித்தோம். அப்போது இன்னும் சில வாரங்களிலேயே அந்த பணத்தை கொடுத்து விடுவோம் என்று கூறினார். ஆனால், இன்னும் இதுவரை கொடுக்கவில்லை. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், இதை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு வேலை உறுதி திட்டத்திற்கு தர வேண்டிய பணம் ஏறத்தாழ ரூ.4034 கோடியை தர வேண்டும்.
இந்த பணம் 5 மாதங்களாக தரப்படவில்லை என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு சரியான பதில் இல்லை. அதனால நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே திமுக போராட்டத்தில் இறங்கியது. எங்களது போராட்டத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் அத்தனை பேரும் இணைந்து போராடினர். அப்போது அவை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் எங்களை சந்தித்து தயவுசெய்து அவையை நடத்துங்கள் அனுமதிக்க வேண்டும்.
நிச்சயமாக ஏப்ரல் முதல் வாரத்திலே பணம் வந்துவிடும் என்று முதல்வரிடம் கூறுங்கள் என உறுதி அளித்தனர். ஆனால் அந்த உறுதியை எந்த அளவுக்கு நாம் நம்ப முடியும் என்று தெரியவில்லை. காரணம் அவர்கள் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் வாக்குறுதி கொடுக்கின்றனர். ஆனால் பணம் வந்து சேர்வதில்லை. அதனால் தான் மக்களோடு சேர்ந்து போராட வேண்டும். மக்களுக்கான நியாயத்துக்காக அவர்களோடு நின்று போராட வேண்டும் என்று இந்த போராட்ட களத்துக்கு அமைச்சர்களை, எம்.பி.க்களை முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கேட்கும் போது, மத்திய அமைச்சர் ஒருவர் மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாட்டுக்கு தான் அதிக நிதி ஒதுக்கி உள்ளதாக தவறான தகவலை தருகிறார். 100 நாள் வேலை திட்டம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்களில் எதுக்கு நிதி கேட்டாலும் மத்திய அரசு கொடுப்பதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்விக்கான நிதி வழங்கப்படும் என்கின்றனர். ஆனால் தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை உள்ளவர்கள் போல் பாஜகவினர் வேஷமிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.