மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1000யை கடந்தது!

மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது பலி எண்ணிக்கை என்பது 1,000யை கடந்துள்ளது. ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர்.

நம் நாட்டின் அண்டை நாடாக மியான்மர் உள்ளது. மியான்மர் என்பது வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. இங்கு மக்களாட்சி நடைபெறவில்லை. ராணுவ ஆட்சி தான் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி பல இடங்களில் கிளர்ச்சி படையினர் குறிப்பிட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் மியான்மரில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பமான அரசியல் சூழல் தான் நிலவி வருகிறது. உள்நாட்டில் ராணுவத்துக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் என்பது ஏற்பட்டு வருகிறது. இதனால் அமைதியான சூழல் என்பது மியான்மரில் இல்லை. இப்படியான நிலையில் தான் நேற்று மியான்மரில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நம் நாட்டின் நேரப்படி நேற்று காலை 11.30 மணியளவில் மியான்மரில் 7.7 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்த நிலையில் அடுத்து சில நிமிடங்களில் இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 என்ற அளவில் பதிவாகி இருந்தது.

இந்த அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் பல பகுதிகள் குலுங்கின. கட்டடங்கள் அதிர்ந்தன. சில அடுக்குமாடி கட்டடங்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்தன. சாலைகளில் விரிசல் விழுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் 2வது பெரிய நகராக அறியப்படும் மண்டாலே மற்றும் சகாய்க் நகரின் 16 கிமீ வடமேற்கு பகுதி மற்றும் அதனை சுற்றிய இடங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் மியான்மர் நாட்டின் ஏராளமானவர்கள் பூமிக்கு அடியில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணி என்பது தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 694 ஆக அதிகரித்துள்ளது. 1,670 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை என்பது 1000யை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மீட்பு பணி தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் புவியில் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) சார்பில், ‛‛மியான்மர் நிலநடுக்கம் மிகவும் மோசமானது. இந்த நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை கடக்கலாம்” என்று அச்சம் தெரிவித்துள்ளது. மியான்மரை பொறுத்தவரை அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி பல இடங்களில் ராணுவத்தினர் மற்றும் நாட்டில் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் என்பது உள்ளது. இதனால் மீட்பு பணியை திறமையாக முன்னெடுப்பதில் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் மியான்மர் ராணுவம் உலக நாடுகளின் உதவியை கோரியுள்ளது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன. தாய்லாந்தில் இதுவரை 10 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாங்காக் நகரின் அடுக்குமாடி கட்டிடம் கட்டுமானப் பணியிடத்தில் 100-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு 15 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. உணவுப் பொருட்கள், கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவற்றை இந்தியா அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் பாதிக்கப்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நிவாரனத்துகாக 5 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் “மியான்மர் அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். மியான்மருக்கு உதவி செய்யப் போகிறோம்.” என்றார்.