வனப் பாதுகாப்பு குறித்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அமைச்சர் க.பொன்முடி பதிலளித்துப் பேசியதாவது:-
அரியவகை பறவைகளான இருவாச்சி பறவைகளை பாதுகாக்கும் வகையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். சிங்கவால் குரங்கு, தென்னிந்திய முள்ளெலி, கழுதைப்புலி, செந்துடுப்பு காவேரி மீன் ஆகியவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கவும் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளவும் ரூ.1 கோடி செலவில் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இயற்கை பாதுகாப்புக்கு மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல், இயற்கை சார்ந்து விழிப்புணர் ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடு்ம் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கப்படும்.
சென்னை கடற்கரையை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு படை உருவாக்கப்படும். அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, மேகமலை ஆகிய இடங்களில் வனஉயிரின புத்தாக்க வளர் மையங்கள் அமைக்கப்படும். சூழல் சமநிலையை உறுதிபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் குள்ளநரிகளை பாதுகாக்கும் வகையில் குள்ளநரி பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் வனப் பாதுகாப்பு குறித்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ரூ.25 லட்சம் செலவில் நீர்நாய் ஆய்வு மற்றும் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்படும். சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வனங்கள் சிதைவுக்கு உள்ளாவதை மீட்டெடுக்க ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஆதிவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க ரூ.1 கோடி செலவில் 20 நபர்களைக் கொண்ட சிறப்பு அதிவிரைவு படை ஏற்படுத்தப்படும்.
கதர் துறையைப் பொருத்தவரை நாகர்கோவில் அம்சி தேன் பதப்படுத்தும் அலகில் ரூ.40 லட்சம் செலவில் கட்டிட புனரமைக்கும் பணியும் தேன் இருப்பு கொள்கலன்கள் நிறுவும் பணியும் மேற்கொள்ளப்படும்.. திருச்சி மாவட்டம் சமயபுரம் சோப்பு அலகில் ரூ.10 லட்சம் செலவில் தானியங்கி சோப்பு ஸ்டாம்பிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் நிறுவப்படும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசிக்கும் இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின தேனீ விவசாயிகள் 100 பேருக்கு ரூ.4 லட்சம் செலவில் தேனீ வளப்ப்பு பெட்டிகள், தேன் சேகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
இதேபோல் பனைப்பொருள் வளர்ச்சி வாரியம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட பனைபொருட்கள் கூட்டுறவு சம்மேளனத்தின் கீழ் இயங்கி வரும் தொடக்க பனைவெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.31.86 லட்சம் செலவில் பனங்கற்கண்டு, பனந்தும்பு, பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.