முந்தா நாள் தோன்றிய கட்சிக்கு பதில் சொல்ல வேண்டுமா?: டி.ஆர். பாலு!

“முந்தா நாள் தோன்றிய கட்சிக்கு பதில் சொல்ல வேண்டுமா?” என விஜய் குறித்த கேள்விக்கு திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர். பாலு தெரிவித்து உள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காததைக் கண்டித்து, திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக-வின் 850 ஒன்றியக் கிளைகளைச் சேர்ந்த 1,170 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம் பரணிப்புதூரில் நடந்த போராட்டத்தை டி.ஆர். பாலு தலைமையேற்று நடத்தினார். “கடந்த ஐந்து மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும் மத்திய வேளாண் அமைச்சர் திருப்திகரமான பதிலை தரவில்லை,” என்று பாலு கூறினார். “இது 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்,” என்று அவர் எச்சரித்தார். 100 நாள் வேலை திட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாநில பங்களிப்பில் இருந்து நிதி தரப்படுமா என்ற கேள்விக்கு, செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறுகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பாலு குற்றம்சாட்டினார். ”ஒவ்வொரு வீட்டுக்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000, 12-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் பெண்களுக்கு ரூ.1000, ஆண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறோம். ஆனால், மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டால் எப்படி நடத்த முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

’100 நாள் வேலைத்திட்டத்தில் மத்திய அமைச்சர் சந்திரசேகர் உத்தரப்பிரதேசம், பீகார் உடன் ஒப்பிடும்போது தமிழகத்துக்கு அதிகம் கொடுக்கிறோம்’ என கூறியது குறித்த கேள்விக்கு ”அப்படியெல்லாம் கொடுப்பது இல்லை. நியாமான கேள்வியை நாங்கள் கேட்கிறோம். அதற்கு துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பதில்தர வேண்டுமே தவிர, இவர் கிடையாது” என டி.ஆர்.பாலு பதிலளித்தார்.

மத்திய அரசின் நிதியை மாநில அரசு கொடுத்துவிட்டு அதை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு “60:40 என்ற விகிதத்தில் மத்திய-மாநில அரசுகள் பங்களிக்கும் திட்டத்திற்கு இது பொருந்தும். ஆனால், இத்திட்டம் 100 சதவீதம் மத்திய அரசின் திட்டம். கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 5000 கோடி வித்தியாசம் உள்ளது. முழு நிதிச்சுமையை மாநில அரசு எப்படி ஏற்க முடியும். நாம் செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கே நிதி ஆதாரம் இல்லாமல் உள்ளோம். ஆனால் மத்திய அரசின் திட்டத்தை நாம் எப்படி நடைமுறைப்படுத்த முடியும்?” என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். “பாராளுமன்றத்தில் இதை எழுப்பியுள்ளோம், நிதி கிடைக்கும் வரை போராடுவோம்,” என்று அவர் தெரிவித்தார்.

தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் திமுக குறித்து விமர்சனம் செய்து உள்ளது குறித்து கேட்கப்பட்டபோது, டி.ஆர். பாலு கடுமையாக பதிலளித்தார். “முந்தா நாள் தோன்றிய ஒரு கட்சிக்கு, அதன் தலைவர் சொல்கிறார் என்று நாங்கள் பதில் சொல்ல வேண்டுமா? நான் 64 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். அவருக்கு பதில் சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.