தமிழ்நாடு உங்களை மீண்டும் தண்டிப்பது உறுதி: உதயநிதி எச்சரிக்கை!

“100 நாள் வேலை திட்டத்தின் கீழ் உழைத்துக் களைத்த மக்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை நிறுத்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி, பாசிஸ்ட்டுகளின் இந்த ஓரவஞ்சனை தொடர்ந்தால், தமிழ்நாடு அவர்களை மீண்டும் தண்டிப்பது உறுதி” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய நிதியை கடந்த சில மாதங்களாக மத்திய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி நிதி வழங்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.4,034 கோடி நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்கள் என 1,170 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

கிராமப்புற பொருளாதாரத்திற்கும் – சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முதுகெலும்பாக இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளதை ஒரு போதும் ஏற்க முடியாது. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உழைத்து களைத்த மக்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை நிறுத்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி. இதனை கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகம் நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போர்க்குரல் டெல்லியின் செவிகளில் விழட்டும். பாசிஸ்ட்டுகளின் இந்த ஓரவஞ்சனை தொடர்ந்தால், தமிழ்நாடு அவர்களை மீண்டும் தண்டிப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.