பொன் மாணிக்கவேல் மீதான விசாரணை தள்ளிவைப்பு!

சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், பொன்.மாணிக்கவேல் மீதான விசாரணை ஏப். 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி.யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். இதே பிரிவில் டிஎஸ்பியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் காதர்பாட்ஷா. இவர் பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், `சிலை கடத்தலில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளியான தீனதயாளனை தப்பவைக்க பொன் மாணிக்கவேல் உதவினார். இதற்கு நான் இடையூறாக இருந்ததால் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்தார். எனவே, பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் புகாரை விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டார். அதன்படி சிபிஐ விசாரித்து, பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிபிஐ முதல்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் நகலை கேட்டு பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் பொன். மாணிக்கவேல் மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சிபிஐ வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “இந்த வழக்கின் எதிர்மனுதாரரான முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்ஷாவுக்கு நீதிமன்றத்தில் இருந்தோ, சிபிஐ தரப்பிலோ இங்கு விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு குறித்த ஆவணங்கள் இதுவரை வழங்கப்படாத நிலையில், காதர் பாட்ஷா உச்ச நீதிமன்றத்தில் விரைவாக வழக்கு தொடர்ந்து, இடைக்கால தடை பெற்றது வியப்பாக இருக்கிறது. விசாரணை ஏப். 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.