சவுக்கு மீடியா நிறுவன அலுவலகத்தை காலி செய்துவிட்டதாக பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் அறிவித்து உள்ளார்.
கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள சவுக்கு சங்கரின் இல்லத்தில் புகுந்த கும்பல் கழிவுநீர் மற்றும் மலத்தை கொட்டி வீட்டை சேதப்படுத்தியது. இச்சம்பவத்தின் பின்னணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் வாணிஸ்ரீ விஜயகுமார் உள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி இருந்தார். தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக்கும் திட்டத்தில் செல்வப்பெருந்தகை மற்றும் அவரது உறவினர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சவுக்கு சங்கர் கூறினார்.
சவுக்கு சங்கர் இல்லம் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம் மற்றும் சசிகாந்த் செந்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வீடு சூறையாடப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர்தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டிய நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடியாதாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோவில், தனது மீடியா நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து இருந்தார். ”என் அம்மா, எங்களை கடும் சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்தவர். சிறுவயதில் என் அப்பா இறந்துவிட்டார். என்னையும் என் தங்கையையும் வளர்க்க, அவர் பட்ட சிரமங்கள் எனக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு மாவு ஆட்டிக் கொடுத்து, எங்களை வளர்த்தார். இன்று வயதானவர்களுக்கு இருக்கும் பல சிரமங்கள், அவருக்கும் இருக்கிறது. என் தாயின் உயிரை பணையம் வைத்து நான் ஏன் சேனல் நடத்த வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். வீடு மற்றும் மீடியா அலுவலகத்தை காலி செய்ய சொல்லி இட உரிமையாளர்கள் கூறியதாகவும் அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சவுக்கு மீடியா அலுவலகம் காலி செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ’எக்ஸ்’ வலைத்தளத்தில், “இரண்டு ஆண்டு காலம், நாங்கள் ஆசை ஆசையாக மீடியா நிறுவனம் நடத்தி வந்த அலுவலகத்தை இன்றோடு காலி செய்கிறோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்” என பதிவிட்டு அலுவலக ஊழியர்கள் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.