அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், என்கவுண்டர்களும் தீவிரமடைந்துள்ளன. போலீசாரின் என்கவுண்டர் நடவடிக்கைகளுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் காவலர் முத்துக்குமார். மது அருந்திக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் மற்றும் அவருடைய நண்பர்களிடம், இனி கஞ்சா விற்க வேண்டாம் என காவலர் முத்துக்குமாரும் அவருடைய நண்பர் ராஜாராமும் அறிவுரை வழங்கியுள்ளனர். அப்போது பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக கஞ்சா வியாபாரியால் இருவரும் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த காவலர் முத்துக்குமார் மீது கல்லைத் தூக்கி போட்டதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் ராஜாராம் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.
கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் அண்மையில்தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என காவலர் முத்துக்குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை வரை இந்த சம்பவம் எதிரொலித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக குரல் எழுப்பினர். இதனால் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தேனி கம்பம் மலைப்பகுதியில் முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை சரக டிஐஜி தலைமையில் தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உதவியோடு சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் 200 மேற்பட்ட போலீசார் வருசநாடு மலையை சுற்றிச் வளைத்தனர். இந்நிலையில் கஞ்சா வியாபாரி பொன்வண்ணனை போலீசார் கைது செய்ய முயன்ற போது பதிலுக்கு அவர் தாக்க முயன்றதால் போலீசார், பொன்வண்ணனை என்கவுண்டர் செய்துள்ளனர். போலீஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 48 மணி நேரத்துக்குள் முக்கிய குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில், போலீஸ் என்கவுண்டர்களை வரவேற்றுள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்வண்ணன் என்பவரை கம்பம் அருகே தமிழக காவல் துறை என்கவுண்டர் செய்யப்பட்டார் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. தமிழக காவல் துறை இதுபோன்று சிறந்த முறையில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினால் தான், குற்ற வழக்குகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
தேமுதிக சார்பாக காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனையும் என்கவுண்டர் செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று நேற்று தெரிவித்து இருந்தோம். சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டவர்களை என்கவுண்டர் செய்தது போல், அதே பாணியில் காவலரை அடித்துக் கொலை செய்தவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதை உடனடியாக இன்று செயல்படுத்திய தமிழக காவல்துறைக்கு தேமுதிக சார்பாகவும், விஜயகாந்த் சார்பாகவும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இரும்புக் கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே, இதுபோன்ற குற்றச்செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காத வண்ணம் தமிழக மக்களை காப்பாற்ற முடியும். ஆகவே, சிறந்த முறையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.