ஏப்ரல் முதல் ஜூன் வரை கடுமையான வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்!

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பல்வேறு மாநிலங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் வழக்கத்தை விடவும் உக்கிரமாக தொடங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பாதிப்பு மிக அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெயில் சற்று கூடுதலாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்ப அலை நாட்கள் ஏற்படக்கூடும் என்று ஐஎம்டி இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியுள்ளார். “ஏப்ரல் முதல் ஜூன் வரை, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகள் இயல்பை விட இரண்டு முதல் நான்கு வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும், மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, அங்கு வெப்பநிலை இயல்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும். பொதுவாக, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் நான்கு முதல் ஏழு வெப்ப அலை நாட்கள் பதிவாகும். வடமேற்கு இந்தியா இரு மடங்கு வெப்ப அலையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும், வடமேற்கு மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில் இயல்பை விட அல்லது இயல்பை விட சற்று குறைவாக வெப்பநிலை இருக்கலாம் என்றும் மொஹபத்ரா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக வெப்பநிலை சற்றே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. இயல்பை விட அதிக வெப்பம் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது என்றும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் உள்ள சமவெளி பகுதிகளில் 36 முதல் 39 டிகிரி செல்சியஸும், வடதமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 32 முதல் 36° டிகிரி செல்சியஸும், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 34 முதல் 36 டிகிரி செல்சியஸும், மலைப் பகுதிகளில் 23 முதல் 31 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, 2025 மார்ச் 31 ஆம் தேதியான இன்றும், 2025 ஏப்ரல் 1ம் தேதியான நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் 2 ஆம் முதல் 4ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து, 2025 ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 1ம் தேதியான நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.