தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில், கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில், கம்பராமாயண தொடக்க விழா நேற்று தொடங்கியது. விழாவைத் தொடங்கிவைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
பாட்னாவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கம்பராமாயணம் பற்றி அறிந்திருக்கிறேன். அப்போதிலிருந்தே இங்கு வர வேண்டுமென ஆசை உண்டு. நான் தமிழகத்துக்கு வந்த பிறகு 2-வது முறையாக அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது. வட மாநிலங்களில் துளசிதாசர் பற்றி நிறைய பேசுவார்கள். ஆனால், தமிழகத்தில் கம்பர் குறித்து அந்த அளவுக்கு பேசவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
பாரதிய கலாச்சாரத்தின் தந்தை கம்பர். தேசத்தின் அடையாளமாக விளங்குபவர் ஸ்ரீராமர். எளிய மக்களுக்குப் புரியும் வகையில் கம்பராமாயணம் அமைந்துள்ளது. ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் கம்பராமாயணம் பதிய வைத்துள்ளது. கம்பர் வெறும் கவிஞர் மட்டுமல்ல, பாரதத்தின் நாயகன்.
தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் உள்ளது. உண்மையில் தமிழ் கலாச்சாரத்தை பற்றிப் பேச வேண்டும் என்றால், கம்பரையும், கம்ப ராமாயணம் குறித்தும் பேச வேண்டும். இங்கு கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் அரசியல்மயமாகியுள்ளது. அரசியல் காரணங்களால் கலாச்சாரம் மறக்கடிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் உள்ள கம்பன் கழகங்கள் மூலம் கம்பராமாயணம் உயிர்ப்புடன் வைக்கப்பட்டுள்ளது. கம்பன் கழகங்களுடன் ராமாயணம் நின்றுவிடக் கூடாது, மக்கள் மனங்களில் இடம்பெற வேண்டும்.
பிரதமர் மோடி தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீது பெரிய பக்தி கொண்டவர். தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்துக்கும் மோடியைபோல வேறு யாரும் செய்ததில்லை. காசி தமிழ்ச் சங்கமம், பல்வேறு நாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தது, பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைத்தது, நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது உள்ளிட்டவற்றை செய்துள்ளார். கம்பரின் பக்தர் மோடி.
கம்பராமாயணத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. இந்நிகழ்வு ஒரு எளிய தொடக்கமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு இன்னும் பெரிய அளவில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, தேரழுந்தூரில் கம்பர் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் கம்பர்மேட்டில் இந்திய தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை ஆளுநர் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். மேலும், ராமர் பட்டாபிஷேக கலை நிகழ்ச்சியை கண்டுரசித்து, கலைஞர்களைப் பாராட்டினார்.