ஒவ்வொரு மழை துளியையும் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி!

ஒவ்வொரு மழை துளியையும் சேமியுங்கள் என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 120-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறை காலம் தொடங்க இருக்கிறது. இந்த கோடை விடுமுறை நாட்களில் ஏதாவது ஆக்கப்பூர்வமானதை செய்ய வேண்டும். நம்முடைய திறன்களை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் பகுதிகளில் நடைபெறும் தொழில்நுட்ப முகாம்களில் பங்கேற்கலாம். ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் குறித்து தெரிந்து கொள்ளலாம். சுற்றுச்சூழல், நாடகம், தலைமைப்பண்பை வளர்த்தல் தொடர்பான முகாம்களில் பங்கேற்கலாம்.

கோடை விடுமுறை தொடங்கும் நேரத்தில் மை பாரத் (MY-Bharat) தளத்தின் சிறப்பு அட்டவணை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். மை பாரத்தின் கல்விச் சுற்றுலாவின் மூலம் ‘மக்கள் மருந்தகங்கள்’ எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். எல்லையோர கிராமங்களின் அனுபவத்தை பெறலாம். பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கலாம். அம்பேத்கர் ஜெயந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்று அரசியல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

கோடை காலம் தொடங்கியிருப்பதால் நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்களில் நீரை சேமிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. குறிப்பாக ஆயிரக்கணக்கான குளங்கள், தடுப்பணைகள், கிணறுகளின் மறுசெறிவு பணிகள் மேற்கொள்ளப்ப்டடு வருகின்றன. இந்த நேரத்தில் மழை நீரை சேகரிப்போம் இயக்கத்தை தீவிரப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இது மத்திய அரசின் இயக்கம் மட்டுமல்ல, சமூகத்தின் இயக்கம் ஆகும். மழை நீர் சேகரிப்புக்கான திட்டங்களில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்காக இயற்கை நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு மழை துளியையும் சேமிக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் மழைநீர் சேகரிப்பு திட்டங்களில் ஈடுபட வேண்டும். கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்க வீட்டின் முன்பு பானையில் குடிநீரை வைக்க வேண்டுகிறேன். இதேபோல வீட்டின் மாடியில், முற்றத்தில் பறவைகளுக்காக நீர் வைக்க வேண்டுகிறேன்.

கேலோ இண்டியா பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் பாராட்டுகிறேன். இந்த போட்டியில் ஹரியானா, தமிழகம், உத்தர பிரதேசம் முதல், 2-வது, 2-வது இடங்களை பெற்றன. பாரா விளையாட்டு போட்டி மூலம் மாற்றுத் திறனாளி வீரர்கள் 18 தேசிய சாதனைகளை ஏற்படுத்தி உள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற ‘பிட் இண்டியா கார்னிவல்’ நிகழ்ச்சியில் 25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் உடல்நலம், ஊட்டச்சத்து சார்ந்த தகவல்கள் பரிமாறி கொள்ளப்பட்டன. இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த வேண்டும்.

கேரளாவை சேர்ந்த ராப் பாடகர் ஹனுமான் கைண்டின் புதிய பாடலான ‘ரன் இட் அப்’ மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில், களறி, கத்கா, தாங்க்-தா போன்ற பாரம்பரியமான போர்க்கலைகள் இடம் பெற்றுள்ளன. அவருடைய முயற்சியால் நமது பாரம்பரிய கலைகள் உலகம் முழுவதும் பிரபலம் அடைகின்றன. அவரை மனதார பாராட்டுகிறேன்.

சிங்கப்பூரை சேர்ந்த இண்டியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி என்ற அமைப்பு பாரதத்தின் நடனம், இசை, கலாச்சாரத்தைப் பேணி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த அமைப்பு 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிங்கப்பூர் அமைப்பின் முயற்சிகளை பாராட்டுகிறேன்.

ஜவுளி கழிவுகள் மிகப்பெரிய சவாலாக உருெடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் பழைய துணிகளை விரைவாக மாற்றிவிட்டு, புதிய ஆடைகளை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அந்த பழைய துணிகள், கழிவுகளாகின்றன. அண்மையில் வெளியான ஓர் ஆய்வின்படி, ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பழைய துணிகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. அதிக ஜவுளி கழிவுகள் சேகரமாகும் நாடுகளின் பட்டியலில் பாரதம் 3-வது இடத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஜவுளி கழிவுகளை ஜவுளிகளை மறுசுழற்சி செய்யும் பணிகளை தொடங்கி உள்ளன. பழைய துணிகளையும் காலணிகளையும் மறுசுழற்சி செய்து தேவையானவர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஜவுளி கழிவுகளில் இருந்து அழகுப் பொருட்கள், பைகள், காகிதங்கள், விளையாட்டுப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

ஹரியானாவின் பானிபட் நகரம் ஜவுளி கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையமாக உருவெடுத்திருக்கிறது. இந்த துறையில் பெங்களூரூவும் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்தின் திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வாயிலாக ஜவுளி கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.

வரும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட உள்ளோம். உங்கள் வாழ்க்கையில் இதுவரை யோகாவை பழகத் தொடங்கவில்லை என்றால், இப்போது தொடங்குங்கள். ‘ஒரு பூமி, ஒரு உடல்நலத்துக்கு யோகா’ என்பதை 2025-ம் ஆண்டின் யோகா தினத்தின் கருவாக வைத்திருக்கிறோம். பாரதத்தின் யோகா, பாரம்பரிய மருந்துகளுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, பல்வேறு மாநிலங்களின் மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த வரிசையில், ‘இனிய புத்தாண்டு நல்வாழ்த்து’ என்று தமிழில் அவர் புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார்.

பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் உகாதி பண்டிகை, மகாராஷ்டிராவில் குடிபடுவா, அசாமில் ரோங்காலி பிஹு, மேற்குவங்கத்தில் போயிலா போய்ஷாக், காஷ்மீரில் நவரேஹ் கொண்டாடப்பட உள்ளது. மேலும் ஈத் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இது பண்டிகை காலம். இந்த பண்டிகைகள் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமையை காண முடிகிறது. இந்த ஒற்றுமை உணர்வை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.