“தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறைகூறுவது எந்தவிதத்தில் நியாயம்?” என அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதுபோல், இதர மாநிலங்களை விட தமிழகம் அதிகம் நிதி பெற்றுள்ளது என்பது உண்மையே. இதற்கு தமிழக அரசின் சிறப்பான செயல்பாடே காரணம்.
ஊரக பகுதி மக்கள் பெரிதும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை நம்பியுள்ளனர். இத்திட்டத்திற்கான நிதியை குறைப்பது அல்லது நிறுத்துவது என்பது நேரடியாக பெண்கள் மற்றும் பின்தங்கியவர்களை பாதிக்கும். இத்திட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் நிதி ஒதுக்கப்படாததால் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2025-2026-ம் ஆண்டிற்கு ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிலும் அதே நிலுவை ஏற்படும் சூழல் உள்ளது. இத்திட்டத்தை நிறுத்த இயலாது என அறிந்த மத்திய அரசு நிதியை குறைப்பது, மனித சக்தி நாட்களை குறைப்பது என இத்திட்டத்தை நீர்த்து போகச்செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி மூன்று முக்கியக் கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியக் கூறு 100 சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது. கட்டுமானப் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான பொருட்கூறு 75 சதவீதம் மத்திய அரசு, 25 சதவீதம் மாநில அரசு வழங்குகிறது. இத்திட்டத்திற்கான நிதிப் பங்கீடு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது தவறானது.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பெரிய மாநிலங்கள், தமிழகத்தைப் போன்று இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மத்திய அரசிடம் அதிக நிதி பெறுவது எப்படி என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, சிறப்பாக செயல்படும் தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறைகூறுவது எந்த விதத்தில் நியாயம்.
தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளை குறைவாக மதிப்பிடுவதை விட்டுவிட்டு மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சிறந்த நடைமுறைகளை உதாரணமாக கொண்டு செல்ல வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.