விசைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: ஈஸ்வரன்!

விசைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்கு மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசினுடைய பல்வேறு கொள்கை நிலைப்பாடுகளும் ஜவுளி ஏற்றுமதிக்கு உறுதுணையாக இல்லை என ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: –

கொங்கு மண்டலம் முழுவதும் கூலி உயர்வு கேட்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர்கள் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக அறிகின்றேன். இன்றைக்கு இருக்கின்ற விலைவாசி ஏற்றம், பள்ளி கல்லூரி கட்டணங்கள் ஆகியவற்றோடு பலவிதமான தேவைகளும் விசைத்தறியாளர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு விசைத்தறியாளர்களுடைய கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து தீர்வு காண வேண்டும்.

மத்திய அரசினுடைய பல்வேறு கொள்கை நிலைப்பாடுகளும் ஜவுளி ஏற்றுமதிக்கு உறுதுணையாக இல்லை என்பதும் இப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. கொள்கை மாற்றங்களை கொண்டு வந்து விசைத்தறி தொழிலை காப்பாற்றுவதற்கு மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்து விசைத்தறி தொழிலுக்கு ஆதரவான கொள்கைகளை வகுக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். அமைச்சர்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி தாமதம் இல்லாமல் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் விசைத்தறியை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமைச்சர்கள் தலைமையில் ஜவுளி தொழில் நிறுவனங்களும், விசைத்தறியாளர்களும் முடிவை எட்டுவதற்கு தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.