தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அமைச்சர் பேச்சால் தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றிய மத்திய அமைச்சரின் பதிலில் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் இன்று லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

லோக்சபாவில் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது பேசிய டிஆர் பாலு, இலங்கையின் அதிபர் அனுர குமார திசநாயக்க, டெல்லி வந்த போது மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் கையாள்வோம் என்றார்; ஆனால் இலங்கை கடற்படை செய்து கொண்டிருப்பது வேறு. தமிழ்நாட்டு மீனவர்கள் நாள்தோறும் கைது செய்யப்படுகின்றனர்; மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் நாள்தோறும் வலியுறுத்துகின்றனர். ஆகையால் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காணும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி, தமிழ்நாட்டு மீனவர்களின் 200-க்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது; இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதால்தான் அவர்களது உடைமைகளை இலங்கை அரசு பறிமுதல் செய்கிறது எனக் குறிப்பிட்டார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் லோக்சபாவில் இருந்து தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.