“நாட்டின் கல்வி முறையை வேட்டையாட மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று ‘சி’-க்களைப் பயன்படுத்துகிறது” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்தால் 3 கொள்கைகளின் அடிப்படையில் பாஜக அரசு செயல்படுவது தெளிவாகும். மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிப்பது, கல்வித் அதிகரித்து வணிக மயமாக்குவது, பாடத் திட்டங்கள், கல்வி நிறுவனங்களை வகுப்புவாத மயமாக்குவது என்ற 3 ‘சி’-க்களுடன் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டின் கல்வி முறையை வேட்டையாட அதிகார மையப்படுத்தல், வணிகமயமாக்கல் மற்றும் வகுப்புவாத மயமாக்கல் (centralisation of power, commercialisation, and communalisation) ஆகிய 3 கொள்கைகளையும் பாஜக பயன்படுத்துகிறது.
கல்வித் துறையில் மாநிலங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை மத்திய அரசு புறந்தள்ளுகிறது. கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க மத்திய, மாநில அரசுகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைபெறவே இல்லை. பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது.
அதற்காக சமக்ரா ஷிக்சா அபியான் திட்டத்தின் கீழ் கல்விக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது. இந்த நிதியைதான் மாநில அரசுகள் பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு இலவச கல்வி உரிமை, கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் பயன்படுத்தி வருகின்றன.
அதேபோல் புதிய தேசியக் கல்விக் கொள்கை உயர் கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் யுஜிசி வழிகாட்டி நெறி முறைகளில் மாற்றங்கள் செய்துள்ளது. இதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது.
இதேபோல் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி படுகொலை. முகலாயர் தொடர்பான வரலாறு களை நீக்கி பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகுதி அடிப்படையில் இல்லாமல், சித்தாந்த ரீதியில் சாதகமாக உள்ளவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது போல் கடந்த 10 ஆண்டுகளாக திட்டமிட்ட ரீதியில் நாட்டின் கல்வி முறை சிதைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.