அரசு பிற சமூகத்தினரின் சொத்துகளையும் குறிவைக்கலாம்: காங்கிரஸ்!

“அரசு இன்று ஒரு சமூகத்தின் சொத்துகளைக் குறிவைத்துள்ளது. நாளை அது பிறரையும் குறிவைக்கலாம்” என்று வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் விமர்சித்தார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று புதன்கிழமை மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மக்களவைத் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசுகையில், “அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்வதாகவும், சிறுபான்மை சமூகத்தை அவமதிப்பதாகவும், இந்தியச் சமூகத்தை அவமதிப்பதாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. இன்று அவர்கள் ஒரு சமூகத்தினரின் நிலங்களைக் குறிவைத்துள்ளனர். நாளை அவர்கள் பிற சமூகங்களையும் குறிவைப்பார்கள். திருத்தங்கள் மசோதாவை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். மேலும், சர்ச்சைகளை உருவாக்கக்கூடாது. இந்த வக்பு சட்டத் திருத்த மசோதா நாட்டில் மேலும் வழக்குகளை அதிகரிக்கவேச் செய்யும்” என்று தெரிவித்தார்.

மேலும், “சட்டத் திருத்த மசோதாவின் ஒவ்வொரு பிரிவும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. முதல் நாளில் இருந்தே அரசியலமைப்பு மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதே அரசின் நோக்கமாக இருந்தது. இது நாட்டின் அமைதியை கெடுத்துவிடும்” என்றார் அவர்.