இன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட கச்சத்தீவு தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அடுத்த ஆண்டு வர இருக்கும் தேர்தலில் மீனவர்களின் வாக்குகளை பெற திமுக நடத்தும் நாடகம் தான் இது” என குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் மட்டும் இல்லாது இந்திய அரசியலிலும் அடிக்கடி ஒலிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் கச்சத்தீவு விவகாரம். இது தொடர்பாக பல கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டையும், குற்றச்சாட்டுக்களை வைப்பது வழக்கம். இந்த வகையில் இன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்டால் மட்டுமே இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். அதில் அடுத்த ஆண்டு வரும் தேர்தல் காரணமாக தான் திமுக அரசு இந்த கச்சத்தீவு தீர்மான நாடகத்தை போட்டுள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.
“ஏன் இத்தனை காலமாக கச்சத்தீவினை மீட்க முயற்சி எடுக்க வில்லை என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதனை முழுமையாக பேசுவதற்கு எனக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. இப்பொழுது அடுத்த ஆண்டு தேர்தல் வரப்போகிறது. இந்த தேர்தலை ஒட்டி இன்றைய முதல்வரும், திமுக கட்சியும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த தீர்மானத்தின் மூலமாக மீனவர்களுக்கு ஏதோ நன்மை செய்வது போல செய்கிறது. உண்மையிலேயே மீனவர்களுக்கு துரோகம் செய்தது இந்த திமுக அரசு தான். மீனவ மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்று தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததாக நாங்கள் எண்ணுகிறோம். இதற்கு முன் 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தீர்களே? அப்போது இந்த மீனவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா? அப்போதே இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருந்தால் நாங்கள் பாராட்டி இருப்போம். நான்கு ஆண்டுகள் கழித்து கடைசி பட்ஜெட் வந்து விட்டது. இப்பொழுது இந்த தீர்மானத்தை கொண்டு வந்து நாடமா ஆடுகிறீர்கள்” எனக் விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “2019 ஆம் ஆண்டு இவர்களிடம் 38 எம்பிக்கள் இருந்தார்கள். அப்போதே ஏன் கட்சதீவை மீட்க வலியுறுத்தவில்லை. போன 2024 ஆம் ஆண்டு கூட 39 எம்பிக்கள் இவர்களிடம் இருந்தார்கள் ஏன் பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை. எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை. அப்போதெல்லாம் விட்டுவிட்டு அடுத்த ஆண்டு தேர்தலை வைத்துக்கொண்டு இப்போது இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது ஒரு நாடகம் தான்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதே பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2008 ஆம் ஆண்டே கச்சத்தீவை மீட்பதற்காக அதிமுகவின் பொது செயலராக இருந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அடுத்த 2009 ஆம் ஆண்டே ஆட்சிக்கு வந்து அந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையும் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கு சொந்தமான கச்சதீவு 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது” எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்த போதும், தமிழ்நாட்டில் அவர்களின் ஆட்சி இருந்த போதும் என எக்காலத்திலும் திமுக கச்சத் தீவை மீட்க முயற்சிக்க வில்லை என எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் கச்சத்தீவு பேசு பொருளாகியுள்ளது.