நித்யானந்தா உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார்: கைலாசா!

பல்வேறு வழக்குகளில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் நித்தியானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலாவிய நிலையில். அவர் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும். அவரது உடல்நிலை குறித்த தகவல்களை கண்டிப்பதாக கைலாசா கூறியுள்ளது.

பலாத்கார வழக்கு, கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா, அவ்வப்போது பக்தர்களுக்கு சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவுகளை சமூக வலைதளங்களின் வாயிலாக ஆற்றி வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் ஒரு குட்டி தீவு விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அங்கே வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருக்கின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் ஜூலை மாதம் குரு பூர்ணிமா என்று நேரலையில் தோன்றி பக்தர்களிடையே பேசினார். தான் சமாதி நிலையில் இருந்ததாகவும் அதற்குப் பிறகு தற்போது மீண்டும் இந்த உலகிற்கு வந்து பக்தர்களிடையே வசித்து வருவதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நித்யானந்தா உடல்நிலை குறித்து நேற்று திடீரென வதந்தி கிளம்பியது. அவர் உயிர் தியாகம் செய்ததாக ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நித்யானந்தா உயிருடன் இருப்பதாகவும் அவரது உடல் நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என கைலாச விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சில ஊடகங்கள், உச்ச இந்து பீடாதிபதி (SPH) நித்யானந்தா தமது இயற்கை வாழ்வை விட்டுவிட்டதாக துயரமான தகவல்களை பரப்பியுள்ளனர். இது திட்டமிட்ட மற்றும் துயரமளிக்கும் தவறான தகவலாகும் என கைலாசா திட்டவட்டமாக அறிவிக்கிறது.

நித்யானந்தா ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், செயல்படிக்கூடிய நிலையிலும் உள்ளார். மார்ச் 30, 2025 அன்று நடந்த உகாதி விழாவில் அவர் நேரலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதை உறுதிப்படுத்தும் வீடியோவையும் பார்க்கலாம். இத்தகைய தவறான தகவல்களை பரப்பி நித்யான்ந்தாவை இழிவுபடுத்த முயன்ற ஊடகங்களை கைலாசா கண்டிக்கிறது. இது ஒரு திட்டமிட்ட சதி எனக் கருதப்படுகிறது. இந்தக் கணிப்புகளால் கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நித்யானந்தா மீது இதுவரை 70-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் தோல்வியடைந்ததால், அந்த தரப்பினர் தவறான தகவல்கள் பரப்பும் போக்கிற்கு மாறியுள்ளனர். இந்தத் திட்டமிட்ட வெறுப்பு பரப்புகளின் மூலம் நித்யானந்தாவை எதிர்க்க, இழிவுபடுத்த, மேலும் ஆபத்தில் ஆழ்த்த திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிய வருகிறது. கைலாசா, உலகளாவிய ஊடக அமைப்புகள், அரசாங்கங்கள், மற்றும் மனித உரிமை அமைப்புகளை இந்து மதத்திற்கெதிரான தவறான தகவல்களை பரப்பியவர்களை எதிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா யுகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் நல்ல உடல் நிலையுடன் பேசிய வீடியோவும் அந்த அறிக்கையில் இணைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.