ஜெயலலிதா பற்றி செல்வப்பெருந்தகை பேசியதால் பொங்கி எழுந்த செங்கோட்டையன்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ஜெயலலிதா பற்றி பேசியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகப் பொங்கி எழுந்தார்.

கடந்த சில வாரங்களாக செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களை செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து செல்வப்பெருந்தகை இன்று பேசியபோது செங்கோட்டையன் கோபமாகப் பொங்கி எழுந்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கச்சத்தீவு விவகாரத்தில் மாநில அரசுதான் இலங்கைக்கு தீவை வழங்கியதைப் போல தவறான தகவலைப் பரப்பி, அரசியல் கட்சிகள் பேசிவருவது வழக்கமாகிவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காக கட்சிகள் செய்யும் அதே தவறை மத்திய அரசும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, முதலமைச்சராக இருந்த கருணாநிதி அதனை எதிர்த்துள்ளார். இது தமிழக மக்களின் விருப்பங்களுக்கு மாறானது என்பதை எடுத்துக் கூறியுள்ளார். இலங்கைக்கு அளிக்கக்கூடாது என வாதிட்டுள்ளார். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் 28.06.1974 அன்று கையெழுத்தானவுடன் மறுநாளே 29.06.1974 அன்று முதல்வர் கலைஞர் அனைத்துக் கட்சி கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி அதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி அன்றைய தினமே பிரதமருக்கு கடிதம் எழுதினார்” எனப் பேசினார்.

இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசும்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு சில விஷயங்களை பேசினார். அது அதிமுகவினரை கோபமடையச் செய்த நிலையில் முதல் ஆளாக சூடாகி எழுந்த செங்கோட்டையன் ஆக்ரோஷமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கிக் கத்தினார். ஜெயலலிதாவைப் பற்றி அவர் விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா?” என ஆவேசமாக எழுந்து பேசினார். உடனே மற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து அமளியில் ஈடுபட்டனர்.

பிறகு செல்வப்பெருந்தகையின் அந்தப் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து கட்சியினரும் இந்த தீர்மானத்தின் மீது பேசினர். இந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தருவதாக அறிவித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. “இது உணர்வுப்பூர்வமான பிரச்னை; நம் உரிமையை மீட்க வேண்டும்” என்று கூறினார். இறுதியாக கச்சத்தீவை மீட்பதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.