நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேறியிருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்த மசோதா குறித்து சு.வெங்கடேசன் கூறியதாவது:-
நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தில் ஆளும் கட்சியின் தரப்பில் பேசிய பலரும் வெறுப்பை கக்கித் தீர்த்தார்கள். எந்த வெறுப்புணர்வும், பேதங்களும், பிரிவினை ஏற்படுத்திய காயங்களும் மக்கி மண்ணோடு மறைய வேண்டுமென இந்திய சமூகம் தொடர்ந்து முயன்று வந்ததோ, அவற்றையெல்லாம் மீண்டும் கிளறி தேசத்தின் தலைப்பு செய்தியாக்கும் அரசியலை பாஜக செய்து முடித்தது. அடுத்து வரும் நாட்களில் அவைகள் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்படும்.
இன்று இஸ்லாமியர்களுக்கு நேர்வதே நாளை கிருஸ்துவர்களுக்கும். நாளை மறுநாள் பட்டியலினம், மற்றும் பழங்குடியினருக்கும். அதற்கு மறுநாள் பிற்பட்டோருக்கும். பாஜகவினருக்குத் தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம். எனவே அவற்றையே முழுநேரமும் சுவாசிக்க நினைக்கிறார்கள். நமக்கு தேவை நிகழ்காலத்துகான நல்வாழ்வும், எதிர்காலத்துக்கான நற்கனவும். பழைய பேய்களை நம் கனவுகளின் மீதும், சிந்தனையின் மீதும் ஏவிவிடும் பத்தாம்பசலிகளுக்கு எதிராக சலிப்பின்றி போரிடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்தி மாநாடு மதுரையில் தொடங்கியது. மதுரையில் இதற்கு முன்னர் அகில இந்திய மாநாடு 53 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது. அந்த வகையில் இந்த முறை நடக்கும் மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் மாநாட்டின் வரவேற்புக்குழுச் செயலாளரும், மதுரை தொகுதியின் எம்பியுமான சு.வெங்கடேசன் மாநாட்டில் பங்கேற்காமல் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று, வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார். இதுபற்றி கூறியுள்ள அவர், “53 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடக்கிறது. மநாட்டுக்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பாக அமைய இரண்டு மாத காலமாக உழைத்திட்ட எண்ணற்ற தோழர்களில் நானும் ஒருவன். தற்போது தொடக்க விழா நடைபெற்றது. ஆனால் அது துவங்குவதற்கு முன்பாக காலை 9.50 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் தில்லி செல்கிறேன். நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதனன்று தாக்கல் செய்து, விவாதம் நடத்தி, உடடினயாக நிறைவேற்றப் போகிறது. ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த, ஜனநாயகத்தைக் காப்பாற்ற, மதச்சார்பற்ற கோட்பாடுகளைப் பாதுகாக்க, இஸ்லாமியர்-சிறுபான்மை மக்கள் மீது நடைபெறும் தாக்ககுதலைத் தடுத்து நிறுத்தி அவர்களைப் பேணிப் பாதுகாக்கவும் நாடாளுமன்றம் செல்கிறேன். மோடி அரசின் மக்கள் விரோத வக்பு வாரிய திருத்த மசோதாவை முறியடிப்போம். நம்முடைய லட்சியங்கள் நம்முடைய விருப்பங்களுக்கு இடமளிக்காமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய உரிமைகளுக்கு நாமன்றி யார் நிற்பது?” என்று கூறியுள்ளார்.