திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் திமுக மாணவரணி சார்பில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ராசா திமுக கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைப்பது குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் ஆ.ராசா பேசுகையில், சுவாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. கடவுள் தேவைப்படுபவர்கள் வைத்துக் கொள்ளலாம். அன்பு தான் கடவுள், மனிதர்களுக்கு மனிதர் காட்டுகிற இரக்கம் தான் கடவுள், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம், அண்ணா சொன்னது போல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட கடவுள் மீது நமக்கு ஒன்றும் கோபம் இல்லை. வைத்து கொள்ளுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போதும், நீங்களும் கையில் கயிறு கட்டி சங்கியும் கையில் கயிறு கட்டும்போது எவன் சங்கி எவன் திமுககாரன் என்று வித்தியாசம் தெரியாது. இதனால் தான் சொல்கிறேன். கடவுளை கும்பிடுங்கள். உங்களின் தாயார், அப்பா விபூதி தந்தால் வைத்து கொள்ளுங்கள். எல்லாம் முடிந்த பிறகு திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க. ஏனென்றால் கொள்கை இல்லாமல் போனால் அரசியல் கட்சி அழிந்துவிடும். அதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கட்சி தான் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி என்று பேசியுள்ளார்.
கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீங்க என்று ஆ.ராசா கூறியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம் என்று சொன்ன ஆ.ராசாவின் கருத்து அவரது சொந்த கருத்து. திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்படியெல்லாம் சொல்லவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் குறித்த கேள்விக்கு, அண்ணாமலை நீக்கம் என்பது அவர்களது கட்சியின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மோடியும் எடுக்க வேண்டிய முடிவு அது. இதில் நாங்கள் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை.. எப்படிப்பட்ட தலைவர்கள், எந்த சூழல் வந்தாலும் அவர்களை சந்திப்பதற்கு எங்கள் இயக்க தலைமை வலுவாக இருக்கிறது. இரும்பு மனிதரைப் போல எங்கள் முதல்வர் இருக்கிறார். ஆகவே, களத்தில் களமாடுவதற்கு ஒரு அண்ணாமலை அல்ல ஒருநூறு அண்ணாமலை வந்தாலும் அவர்களைச் சமாளிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. அது அவர்களுடைய கட்சி பிரச்சனை. பக்கத்து வீட்டில் எட்டி பார்க்கும் பழக்கம் திமுகவிற்கு இல்லை.
நேர் வழியாக தேர்தல் களத்தில் நின்று முதல்வரானவர் ஸ்டாலின். அதனால் குறுக்கு வழியை நாங்கள் எப்போதும் விரும்பாதவர்கள். மற்ற இயக்கத்தில் நடக்கும் குளறுபடிகளை வைத்து ஆதாயம் தேட நினைக்கின்றனர். ஆனால் எங்கள் கொள்கை, இயக்கம், கோட்பாடுகள், லட்சியங்களை மையப்படுத்தி நடைபோடுகிற இயக்கம் திமுக. இவ்வாறு அவர் கூறினார்.