‘இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும். கடந்த 3 மாதங்களில் 147 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 19 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்னகவே 20 மீனவர்கள் இலங்கை சிறையில் கடும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்திய பிரதமர் இலங்கை சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசும்போது மீனவர்கள் முறைவைத்து மீன்பிடிப்பது, கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை அதிபரிடம் வலியிறுத்தி ராமேஸ்வரம் வரும்போது நல்ல செய்தியை பிரதமர் தெரிவிக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 118.9 கிலோ மீட்டர் பாதை அமைக்க டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கியது சமூகநீதிக்கு பாதிப்பை உள்ளாக்கும். முதல்கட்ட திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இயக்கி பராமரித்து வருகிறது. அதேபோல இத்திட்டத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காது. தமிழக அரசிடம் பேசி இம்முடிவை மெட்ரோ ரயில் எடுத்ததா என தெரியவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும்.
தெலங்கானாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின் பட்டியலின மக்கள் விழுக்காடு 15 ஆகவும், பழங்குடி மக்களுக்கு 10 ஆக உயர்த்தியுள்ளது. தெலங்கானா இட இதுக்கீடு சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்று தெலுங்கானா அரசு வலியிறுத்தியுள்ளது. இதை பாமக ஆதரிக்கிறது.
இந்தியா முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
83 அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்பவேண்டும். தமிழக சித்த நூல்களை ஆயுர்வேத நூலாக ஆயுஷ் மாற்றியுள்ளது. இதன் மூலம் சித்த மருத்துவத்தை கண்டுபிடித்தவர்கள் வட இந்தியர்கள் என சொல்லும் வாய்ப்புள்ளது. எனவே மே 7ம் தேதிக்குள் தமிழக அரசு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்.
எம்புரான் மலையாளப் படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடர் என்கவுன்ட்டர் சம்பவங்களால் குற்றங்கள் பெருகி வருகின்றனஎன்பது தெரிகிறது. வக்பு வாரிய திருத்த சட்டத்தை பாமக ஆதரிக்கவில்லை. அதனால்தான் தமிழக அரசின் தீர்மானத்தை பாமக உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை ஆட்சியரை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.