வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பாஜக எம்.பி. அனுராக் தாகுர் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மேலும் அனுராக் தாக்குர் தனது குற்றச்சாட்டினை நிரூபித்தால் ராஜினாமா செய்யவும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை தினத்தை முன்னிட்டு, அவை இன்று (வியாழக்கிழமை) தலைவர் ஜக்தீப் தன்கரின் உரையுடன் தொடங்கியது. பின்பு அவையில் எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக எம்.பி. அனுராக் தாகுர் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்துப் பேசிய கார்கே, “நேற்று பாஜக எம்.பி. அனுராக் தாகுர் கூறிய கருத்துகள் மக்களவையில் திரும்பப் பெறப்பட்டாலும் அவை ஊடங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பட்டிருக்கும். நானோ, எனது குடும்பத்தினரோ வக்பு சொத்துகளை அபகரித்ததாக குற்றம்சாட்டிய அனுராக் தாகுர் அதனை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு அவர் நிரூபித்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். அப்படி நிரூப்பிக்கத் தவறினால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அரசியல் அழுத்தங்களுக்கு எல்லாம் நான் அடிபணியமாட்டேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் தன்கர், “கருத்துகளை நீக்குவது தீர்வாக இருக்காது. முந்தைய சந்தர்ப்பங்களிலும் மூத்த உறுப்பினர்கள் மீது இதுபோல குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவையில் மன்னிப்புக் கேட்பது உறுப்பினர்களின் கண்ணியத்தைக் காக்க உதவும்” என்றார்.
முன்னதாக, மக்களவையில் வக்பு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்த போது பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்குர், “வக்பு திருத்தச் சட்டம், காங்கிரஸின் சமாதான அரசியலை சவபெட்டிக்கு அனுப்பும் கடைசி ஆணியாகும். வக்பு வாரியம் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக சொத்துகளை நிர்வகிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நிலங்களை முறைகேடாக பயன்படுத்தி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதனை தங்களின் வாக்கு வங்கிக்காக பயன்படுத்தின” என்று குற்றம்சாட்டியிருந்தார்.