கடந்த ஆண்டு இயற்கை பேரிடரைச் சந்தித்த தமிழகத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.522.34 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்ட பிகார், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன் தோளோடு தோள் நிற்கிறது. மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு 2024-ஆம் ஆண்டில் திடீர் வெள்ளம், பலத்த மழை, நிலச்சரிவுகள், சூறாவளி புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிகார், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1280.35 கோடி கூடுதல் நிதி உதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
திடீர் வெள்ளம், பலத்த மழை, நிலச்சரிவு, சூறாவளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிகாருக்கு ரூ.588.73 கோடியும், ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழகத்துக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மூன்று மாநிலங்களுக்கு ரூ.1247.29 கோடி மத்திய உதவியாக வழங்க உயர்மட்ட பொறுப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள ஆண்டிற்கான தொடக்க இருப்பில் 50 சதவீதமும், ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ரூ.33.06 கோடியும் சரி செய்யப்படும்.
இந்தக் கூடுதல் உதவி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வசம் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் யூனியன் பிரதேச பேரிடர் நிவாரண நிதியில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதிக்கு கூடுதல் ஆகும்.
2024-25 நிதியாண்டில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியையும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியையும் விடுவித்துள்ளது. மேலும், மாநில பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
முறையான வேண்டுகோள் கிடைக்கும் வரை காத்திருக்காமல், பேரிடர்கள் ஏற்பட்ட உடனேயே, அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழுக்களை இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.