மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்றைய விசாரணையின்போது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு கையகப்படுத்தி மீண்டும் வனப்பரப்பாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இங்கு, வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பெரியார் புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் காப்பகம், மேகமலை, திருநெல்வேலி வனவிலங்குகள் சரணாலயம், மாஞ்சோலை ஆகியவற்றை உள்ளடக்கிய அகஸ்தியர் மலையில் காடுகள் அழிப்பு, அகஸ்தியர் மலைப்பகுதியில் வனத்தை தவிர வேறு பயிர் சாகுபடி, தோட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடக்கிறதா? என்பதை குழு அமைத்து ஆய்வு செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காப்புக்காடு, புலிகள் வாழிடங்கள், யானைகள் வழித்தடங்களை பாதுகாத்து மீட்டெடுப்பது குறித்தும் பரிந்துரைகளை வழங்கவும் அந்த குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.