முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வகையில் தோல்வி அடைந்துள்ளார்: கே.பி.முனுசாமி!

“முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வகையில் தோல்வி அடைந்ததால், அதை மறைக்க மக்களை திசை திருப்பும் நடவடிக்கையாக பாஜகவை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளரை கேள்வி கேட்க விடாமலும் எதிர்க்கிறார்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். தண்ணீர் பந்தலை திறந்து வைத்த, அதிமுக துணைப் பொது செயலாளர் கே.பி.முனுசாமி பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார. தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

வக்பு வாரிய விவகாரத்தில் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. இதனால்தான், சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தும், மக்களவையில் சட்ட முன் வடிவத்தை எதிர்த்து வாக்களித்தோம்.

சைதை துரைசாமி அதிமுக பதவிகளை அனுபவித்துவிட்டு, வேலை வெட்டி இல்லாமல் எங்கோ அமர்ந்துகொண்டு, யாரையோ திருப்திப்படுத்த கருத்துகளை கூறி வருகிறார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால், செங்கோட்டையன் கழகத்தின் முன்னோடி. அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அவர் டெல்லிக்கு சென்று நிதியமைச்சரை சந்தித்தார், அதை மறுக்கவே இல்லை.

திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வகையில் தோல்வி அடைந்துள்ளார். இந்த தோல்வியை மக்களிடமிருந்து மறைக்கவே, சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வருகிறார். குறிப்பாக மத்திய பாஜக அரசு மீதும் எதிர்ப்பது, அதிமுக பொது செயலாளர் பழனிசாமியை கேள்வி கேட்கவிடாமல் தடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து எவ்வித கேள்வியும் எழவில்லை. ஆனால், அதற்கு ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். கச்சத்தீவு 1974-ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி, அன்றைய பிரதமருடன் கூட்டு சேர்ந்து கொண்டு அதற்கு ஒத்துழைத்தார். தற்போது கச்சத்தீவை மீட்க, மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருகிறார். கச்சத்தீவை பொறுத்தவரை, இந்திய, இலங்கை அரசுகள் எடுக்கக்கூடிய முடிவு. மாநில அரசு, மாநில கட்சி எடுக்க கூடிய முடிவு அல்ல. தற்போது பிரதமர் இலங்கை சென்றுள்ளார், என்ன முடிவுடன் வருகிறார் என்பதை நாம் பார்ப்போம்.

மேலும், தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக எங்களிடம் ரகசியம் உள்ளது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு கையெழுத்து போட்டால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தந்தையும், மகனும் தெரிவித்தனர். ஆனால், பல்வேறு முயற்சி செய்தார்கள் முடியவில்லை. அடுத்தாக, சேலம் மாநாட்டில் நீட்தேர்வை ரத்து செய்ய போவதாக கூறி 30 லட்சம் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்கள். அதுவும் காற்றில் பறந்துவிட்டது.

இன்னும் ஓராண்டில் தேர்தல் வர உள்ளதால், மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றாத காரணத்தினால் எப்படியாவது மக்களின் மனங்களை திசைத் திருப்ப வேண்டும் என்பதற்காக, நேற்று கூட சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக ஒரு அறிக்கை விட்டு கதை பேசி கொண்டிருக்கிறார். கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.