அமெரிக்க பொருட்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி: சீனா!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா கூடுதலாக 34 சதவீத வரிவிதித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்தியா, சீனா, இலங்கை, கம்போடியா, தைவான், ஐரோப்பிய யூனியன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இந்தியாவுக்கு கூடுதலாக 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

சீனா மீது ஏற்கனவே 20 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதல் வரி 34 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், சர்வதேச வர்த்தகப்போர் மூண்டுள்ளது. டிரம்ப்பின் இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தகம், பங்குச்சந்தை உள்பட பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா கூடுதலாக 34 சதவீத வரி விதித்துள்ளது. டிரம்ப் அறிவித்துள்ள இறக்குமதி வரி விதிப்பு 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் அந்த நாளில் இருந்தே அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வரும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த வரிவிதிப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.