சைனா செமிகண்டக்டர் பண்றான்! நாம சாப்பாடு டெலிவரி பண்றோம்!: பியூஷ் கோயல்!

சீன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள், ஏஐ தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்வதை பிரதானமாக கொண்டு உள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

ஸ்டார்ட் அப் மகாகும்ப் என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். இது இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதை சிந்திக்க வைப்பதாக அமைந்தது.

“இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இன்று என்ன செய்கின்றன? உணவு டெலிவரி ஆப்களை உருவாக்கி, படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்களை குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களாக மாற்றி, பணக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே உணவு பெறுவதற்கு உதவுகின்றன” என்று பியூஷ் கோயல் விமர்சனம் செய்தார்.

“ஆனால், சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்ன செய்கின்றன? மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பங்களை உருவாக்கி, மின்சார வாகன சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவின் சாதனைகளைப் பற்றி நாம் பெருமைப்படுகிறோம், ஆனால் உலகின் சிறந்தவர்களாக நாம் இன்னும் ஆகவில்லை. நாம் அதை நோக்கி பயணிக்க வேண்டுமா, அல்லது டெலிவரி பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸாக திருப்தியடையப் போகிறோமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

“நாடு முழுவதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றிக் கதைகளை ஆராய்ந்து வருகிறேன். பலர் ஆடம்பர ஐஸ்கிரீம்கள் மற்றும் குக்கீகளை உருவாக்கி வெற்றி பெறுகின்றனர். பில்லியனர்களின் பிள்ளைகள் கூட இதில் ஈடுபட்டு, பிரபலமான பிராண்டுகளை நடத்துகின்றனர். இதில் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், இதுவா இந்தியாவின் விதி? ஆரோக்கியமான ஐஸ்கிரீம்களும், வீகன் ஐஸ்கிரீம்களுமா நமது எதிர்காலம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முதலீடு செய்து, சுயசார்பு அடைய பல நாடுகள் முயல்கின்றன. சிப்கள் மற்றும் AI மாதிரிகளை உருவாக்கி, எதிர்காலத்திற்கு தயாராகின்றன. ஆனால், நாம் உடனடி மளிகை விநியோகத்தில் கவனம் செலுத்துகிறோம். இது சமீபத்திய பிரபலமான தொழிலாக உள்ளது. இதற்கு நான் எதிரானவன் இல்லை; இதற்கு எதிர்ப்பு இல்லை; சில பில்லியன் டாலர்களுக்கு பட்டியலிடப்பட்டால் மகிழ்ச்சியே. இதில் வெளிநாட்டினர் நமது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வாங்குவதை விட இந்திய முதலீட்டாளர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

“நமது வளங்கள் அதிவேக லாஜிஸ்டிக்ஸிற்கு மட்டுமே செல்கின்றன. மறுபுறம், ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், மெஷின் லேர்னிங், 3D உற்பத்தி, அடுத்த தலைமுறை தொழிற்சாலைகள் ஆகியவற்றில் மற்றவர்கள் தயாராகின்றனர். இவை உலக சந்தைகளை கைப்பற்றி, போட்டியிட உதவுகின்றன. இதுவா இந்தியாவின் எதிர்காலம்?” என்று அவர் வினவினார்.

“நீங்கள் தான் புதிய இந்தியாவின் சிற்பிகள். விக்சித் பாரத் 2047-ஐ உருவாக்க வேண்டியது உங்களைப் பொறுத்தது. அதற்கு பெரிய அளவில் சிந்திக்க வேண்டும், லட்சியமாக இருக்க வேண்டும், பரிசோதனை செய்ய வேண்டும், நமது சிந்தனையின் எல்லைகளை தாண்ட வேண்டும். கடந்த காலத்தால் நம்மை வரம்பிடாதீர்கள்; அறியப்படாதவற்றை ஆராயுங்கள். ஆழ்ந்த தொழில்நுட்பத்தில் ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே உள்ளது தொந்தரவாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

“குறுகிய கால செல்வ உருவாக்கம் சில வசதிகளால் ஏற்படலாம். ஆனால், சர்வதேச அளவில் செல்ல வேண்டிய தேர்வு நம்முன் உள்ளது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில், சிறிய இலக்குகளை நாம் நோக்கவில்லை. ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், யுகே, அமெரிக்கா, பெரு, சிலி, நியூசிலாந்து, ஓமன், கத்தார் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்ய பெரிய அளவில் பார்க்கிறோம். காங்கிரஸ் கலாச்சாரம் பலவீனமான நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தது; மோடி உலகின் சிறந்தவர்களுடன் போட்டியிடுகிறார்” என்று அவர் விளக்கினார்.