தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாநிலம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள அதே வேளையில் மக்கள் மீதான சுமையும் அதிகரித்துள்ளது. பால்விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என மக்களுக்கு சுமைதான் அதிகரித்துள்ளது.
ஆளும் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாற்றுக் கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நல்லாட்சி அமைக்க வேண்டும். அந்தக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படும். கூட்டணியைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். நீட் குறித்து திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் பிரச்னைகள் அதிகமாக உள்ளன.
இதிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில் அறிவிக்கப்படாத தொகுதி மறுவரை சீரமைப்பு தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டது. இப்போது நீட் தொடர்பான கூட்டம் நடத்தப்படுகிறது. கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம். மத்திய பாஜக ஆட்சியில் நாடு அமைதியாக ஒற்றுமையாக இருப்பதாகவும், மத்திய அரசின் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைந்து வருவதாகவும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்த போதும் அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.