பணம் கட்டி ஆன்லைனில் ரம்மி விளையாடுவதும் சூதாட்டம்தான்: தமிழக அரசு வாதம்!

பணம் கட்டி ஆன்லைனில் ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம்தான் என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து கடந்த பிப்.14-ம் தேதியன்று அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஆன்லைனில் ரம்மி விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, யாரும் ஆன்லைனில் ரம்மி விளையாட முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த விதிமுறைகளை எதிர்த்து பல்வேறு தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. ஏற்கெனவே ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்த நிலையில் நேற்று தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் அரவிந்த் ஶ்ரீவஸ்தா ஆகியோர் வாதிட்டனர்.

அப்போது அவர்கள் வாதிடுகையில், “பணம் கட்டி ஆன்லைனில் ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம்தான். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும், அதற்கான விதிகளை வகுக்கவும் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது. இதுபோன்ற விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது அரசின் பொறுப்பு. வயதை சரிபார்க்கும் நோக்கில் தான் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பது அரசின் கடமை. ஆன்லைன் விளையாட்டுகளையும், ஆன்லைன் ரம்மியையும் தமிழக அரசால் ஒழுங்குபடுத்த முடியாது என்ற நிறுவனங்களின் வாதத்தை ஏற்கெனவே உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பொருள் இழப்பு மட்டுமின்றி உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. உலக சுகாதார நிறுவனமும் இதுபோன்ற விளையாட்டுகளால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆன்லைனில் ரம்மி விளையாடுபவர்களின் வயது உள்ளிட்ட விவரங்களைக் கோருவதால் அந்தரங்க உரிமை எந்த வகையிலும் பாதிக்காது. 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் விளையாடக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனிநபர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பமும், ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. கேண்டி க்ரஷ் போன்ற மற்ற விளையாட்டுகளுடன் ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறானது. இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டபிறகு தான் இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன,” என வாதிட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்.7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.