“முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி. என்ற முறையில் முதல்வர் குறித்தோ அல்லது அரசைப் பற்றியோ விமர்சிக்கும்போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்” என அதிமுக எம்.பி, சி.வி.சண்முகத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தமிழக அரசு குறித்தும், தமிழக முதல்வர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இதேபோல சி.வி.சண்முகத்துக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அதிமுக எம்.பியான சி.வி.சண்முகம் மீதான வழக்குகளை ரத்து செய்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இநநிலையில், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவில், “ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சியை விமர்சிக்க எதிர்கட்சி என்ற முறையில் மனுதாரருக்கு உரிமை உள்ளது. அதற்காக வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக் கூடாது. பேச்சுரிமை, கருத்துரிமை அனைவருக்கும் பொதுவானதே என்றாலும் அனைத்துக்கும் ஓர் எல்லை உண்டு.
அதேநேரம் சட்டம் – ஒழுங்கை பாதிக்காத எந்த பேச்சையும் குற்ற வழக்குகள் மூலம் முடக்கி விட முடியாது. விசாரணை நீதிமன்றம் இந்த அவதூறு வழக்கை விசாரணைக்கு எடுத்ததே தவறு. இருப்பினும் மனுதாரர் முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும், தற்போதைய எம்.பி என்ற முறையிலும் முதல்வர் குறித்தோ அல்லது அரசைப் பற்றியோ விமர்சிக்கும் போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். பேச்சுரிமை இருக்கிறது என்பதற்காக பொதுக்கூட்டங்களில் பேசும்போது வெறுப்பை வெளிப்படுத்தக் கூடாது,” என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.