பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது!

ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் புதிதாக திறக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. செங்குத்து தூக்கு பாலம் மேலே ஏற்றப்பட்ட நிலையில், மீண்டும் கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டிருக்கிறது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமாகவும், இன்னொரு புறம் இறக்கமாகவும் இருப்பதாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இலங்கை அனுராதபுரத்தில் இருந்து எம்ஐ17 ரக ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் வந்த பிரதமர் மோடி, அதன்பின் கார் மூலமாக ராமேஸ்வரம் வந்தார். அங்கு அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அதேபோல் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மண்டபம் – ராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிமீ தொலைவிலான ரயில் பாலத்தை கொடியசைத்து திறந்து வைத்தார். 2019ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ரூ.550 கோடியில் கட்டப்பட்டு, 2024ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதன்பின் புதிய பாலத்தில் ரயில் பயணம் தொடங்கியது. அதேபோல் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு திறக்கப்பட்ட இந்திய கடற்படை கப்பலும் பயணித்தது. இதற்காக செங்குத்து தூக்கு பாலம் ஏற்றப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமும், இன்னொரு பக்கம் இறக்கமுமாக இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பழுது நீக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.