அமைச்சர் கே என் நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருந்தனர். இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் நேருவின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. 10 மணி நேரமாக நடந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீட்டில் ரெய்டை மேற்கொண்டனர். வங்கி மோசடி வழக்கு ஒன்றில் விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதில் இன்று காலை முதல் ரெய்டை மேற்கொண்டு வருகிறது. காலை முதல் நேருவின் சகோதர, சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் ரெய்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்ததாக திருச்சியில் உள்ள கே என் நேருவின் வீட்டிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. காலையில் இருந்து 10 மணி நேரமாக நடந்து வந்த சோதனை மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே என் நேருவின் வீட்டில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து கிளம்பும் போது அதிகாரிகள் கையில் ஒரு பெட்டியை வைத்திருந்தனர். கேஎன் நேரு வீட்டில் சோதனை நிறைவடைந்த நிலையில் அவரது உறவினர்கள், சகோதர சகோதரிகள் வீடுகளில் சோதனை இன்னும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.