வக்பு சட்ட திருத்தத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும்: ப.சிதம்பரம்!

வக்பு சட்ட திருத்தத்தில் ஏராளமான பிழைகள் இருப்பதால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் நிச்சயம் அறிவிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டுக்கு பிறகு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீரை இரண்டாக உடைத்து மாநில அந்தஸ்தை பறித்து யூனியன் பிரதேசத்தை உருவாக்கியது, பொது சிவில் சட்டம் என முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது வக்பு சட்ட திருத்தமும் சேர்ந்துள்ளது. இதில் ஏராளமான பிழைகள் உள்ளன. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இனிமேல் முஸ்லிம் அல்லாதவர்கள் வக்புக்கு சொத்துகளை வழங்க முடியாது. முஸ்லிமாக தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள்தான் வக்புக்கு சொத்துகளை வழங்க முடியும். இதற்கெல்லாம் மேலாக, வக்பு வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயில் அறங்காவலராக ஒரு முஸ்லிமை நியமித்தால் இந்துக்கள் ஏற்பார்களா.

இதுபோன்ற அநீதி, முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று எண்ணக்கூடாது. வருங்காலத்தில் கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, ஜைன மதத்தினருக்கும் இந்த அநீதி நிகழலாம். வக்பு வாரிய நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கலாம் என்ற மிகப்பெரிய பிழை இந்த சட்ட திருத்தத்தில் உள்ளது. இதனால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் நிச்சயம் அறிவிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசியபோது, “வக்பு சட்ட திருத்தம் மூலம் நாட்டு ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. முஸ்லிம்களின் உரிமைகள், சொத்துகள் அபகரிக்கப்படுவதை தடுக்க, வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, பிரதமர் மோடியை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கறுப்பு கொடி ஏந்தி கோஷமிட்டனர்.